×

கமிஷனை கேட்டு அதிகாரிகளை மிரட்டும் தாமரை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார்

‘‘தூங்கா நகர் மாவட்டத்துல தாமரை கட்சியினர் எதற்காக பர்சன்டேஜ் கேட்டு மிரட்டுறாங்க…’’ என்று அதிர்ச்சியுடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘தூங்காநகர மாவட்டத்தில் மங்கலம் என முடியும் பெயர் கொண்ட ஊராட்சி ஒன்றியத்தின் அலுவலர்கள் தாமரை கட்சி நி்ர்வாகிகளின் மிரட்டல்களால் அதிர்ச்சியில் இருக்காங்களாம். அதாவது, இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இலைக்கட்சியை சேர்ந்த பெண்ணே சேர்மனாக இருக்கிறாராம். அதை பற்றி எல்லாம் தாமரை கட்சியினர் கண்டு கொள்ளவில்லையாம். எங்கள் தயவில்தான் இலை கட்சியின் தலைமையே இருக்கு. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும் நாங்கள் சொல்றதை தான் கேட்கணும் என்று சொல்லி மிரட்டறாங்களாம். தூங்கா நகரத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தில், இலை கட்சியின் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளையும் மிரட்டறாங்களாம். இவர்களின் மிரட்டலுக்கு தூங்கா நகர மாவட்ட அதிகாரிகளும் தப்பவில்லையாம். இதனால், தாமரை கட்சியின் ஆட்களை பார்த்தாலே, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அவர்கள் கண்ணில் படாமல் தலைதெறிக்க ஓடுறாங்களாம். மத்தியில் தாமரைதான் ஆளுங்கட்சியாக இருக்கிறது. தூங்கா நகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அரசின் திட்டங்களுக்கான நிதியை ஒன்றியத்தில் உள்ள தாமரை அரசுதான் ஒதுக்குகிறது.

அதை வைத்துதான் ரோடு, குழாய், வீடுகளை கட்டி தர்றீங்க. எனவே, ஒன்றிய அரசிடம் இருந்து வரும் பணிக்கான நிதியை வைத்துதான் 80 சதவீதம் ஊரக உள்ளாட்சியும், வளர்ச்சி பணிகளும் நடக்கிறது. எனவே அனைத்து பணிகளிலும் எங்களுக்கு கமிஷன் தர வேண்டும் என பிடிஓ, இன்ஜினியர், இலை கட்சி சேர்மனான பெண்ணை கூட மிரட்டி வர்றாங்களாம். வேலை நாட்களில் தினமும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வருகிறார்களாம் தாமரை கட்சியினர். மேலும், தூங்கா நகர மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு துறையாக சென்று இவர்கள் நாங்கள் தாமரை கட்சியின் ஆட்கள், நீங்கள் மேற்கொள்ளும் பணிகள் அனைத்தும் ஒன்றிய அரசிடம் இருந்துதான் வருது. அதனால எங்களுக்குதான் கமிஷன் முதல்ல தரணும்… அடுத்ததுதான் இலை கட்சிக்கு என்று மிரட்டி வருவதால் இலைக்கட்சி நிர்வாகிகள் கூட அலுவலகம் வர தயக்கம் காட்டறாங்களாம். அதிகாரிகளும் தாமரை கட்சி நிர்வாகிகளுக்கு பயந்து எங்கேயாவது சென்று விடுவதால் அன்றாட பணிகளும் பாதிக்குதாம். இதற்கு காரணமான தாமரை நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு தூங்கா நகர மாவட்டத்து அதிகாரிகள் கோரிக்கை விடுத்து இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அதிகாலையில டீ விற்பதுபோல, மதுவை எங்கே விக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குயின்பேட்டை மாவட்டத்துல 2 சப்-டிவிஷன் இருக்குது. இந்த எல்லைக்குட்பட்ட பகுதிகள்ல கவர்மென்ட் பர்மிஷன் இல்லாம மது விற்பனை செய்யறாங்க. அதுவும் டீயும், மதுவும் அதிகாலை 6 மணிக்கே தாராளமாக கிடைக்குதாம். டீ கடைக்கு போற ஆட்களை விட, ரகசியமாக மது விற்பனை செய்யும் நபர்களின் வீடுகளில்தான் குடிமகன்களின் கூட்டம் அதிகமாக இருக்காம்.

இதை கண்காணிக்க வேண்டிய காக்கிகள், கண்டும் காணாமல் இருக்கிறாங்க. அதேபோல, கடை லீவு விட்டாலும் தடையில்லாம மது கிடைக்குதாம். இதற்கு காரணம் ஒரு சில காக்கிகள் வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டு, பச்சை கொடி காட்டுறாங்களாம். இதுல, குயின்பேட்டை, 2 எழுத்து இனிஷியல் கொண்ட மோட்டூர், ஆட்டோ நகரம்னு சில இடங்கள்ல அமோகமாக விற்பனை நடக்குதாம்… அதிகாலையில டீ குடிக்க போன கணவர், போதையில் தள்ளாடி வருவதை பார்க்கும் அவர்களின் மனைவி, குழந்தைகள் அழுவதை பார்க்கவே சங்கடமாக இருக்கு என்று மக்களே பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கதர் கட்சியின் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் பெண்மணியை காணாமல் தவிப்பது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்புவிழா, அடிக்கல் நாட்டுவிழா நடந்ததாம். விழாவில் கதர்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் வந்து கலந்துகொண்டதுடன் தங்கள் தொகுதிக்கான கோரிக்கைகளை முன் வைத்து பேசினாங்க. தாமரை கட்சியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட காந்தியானவரும் கலந்துகொண்டாராம். ஆனால் வழக்கம்போல் கதர்கட்சியில் வெற்றி வாகை சூடிய பெண்மணி மட்டும் வழக்கம்போல் வரவில்லையாம். மாவட்டத்தில், தொகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் அவரை காண்பதே அரிதாகிவிட்டதால் தொகுதிக்கு இவர் வந்து என்ன செய்தார் என்று பட்டிமன்றமே அரசியல் வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சேலம்காரரின் சந்தோஷத்தை தடுக்கும் ஸ்பீட் பிரேக்கர்…’’ யாரு என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.‘‘ இலைகட்சியின் மாநாட்டை நடத்தி சேலம்காரர் ரொம்பவே சந்தோஷ மூடில் இருக்கிறாராம். இப்படி சேலம்காரர் சந்தோஷமாக இருப்பதை ெதரிந்து அவரை ‘மூட்’ அவுட் ஆக்குவதற்காக பெங்களூர்காரரை சேலத்துக்கு அனுப்பி ஒரு பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்து அதில் வசைபாட வைத்து ேதனிகாரர் தன் ஆதங்கத்தை தீர்த்து கொள்கிறாராம். சமீபத்தில், சேலத்துக்காரரு தலைமையில் நடத்திய பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது. அது செல்லும் என்று சமீபத்தில் தீர்ப்பு கிடைத்தது. அப்போது சொந்த ஊரில் மீடியாக்களை அழைச்ச சேலத்துக்காரரு, இது நீதிக்கும், உண்மைக்கும் கிடைத்த வெற்றி. நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன். அப்புறம் மர்மமான முறையில் இறந்த அந்த டிரைவரை, இனிமே யாரும் மம்மியின் டிரைவர்னு சொல்லக்கூடாது அப்டின்னு சொன்னாரு.

ஆனால் அதுக்கு அடுத்த நாளே, தேனிகாரரின் வலது கையான பெங்களூர்காரரான பேமஸ்… மாங்கனி சிட்டிக்கு வந்தாராம். இப்படி வந்தவரு, மர்மமாக இறந்தவரு மம்மியின் டிரைவர் தான் என்ற கோர்ட் டாக்குமென்டை ஆதாரமா காட்டி, பேட்டி கொடுத்து அதிர்ச்சி அளித்தாராம். அதேபோல், சேலத்துக்காரரை கடுமையாக விமர்சித்து காட்டமாகவும் பேசினாராம். இவரு இப்ப மட்டும் இல்லீங்க, எங்க ஆளு சந்தோஷமா இருக்கும் ஒவ்வொரு நிலையிலும், இதேபோல் வம்படியா வந்து பேசி குடைச்சல் கொடுத்துக்கிட்டு இருக்காரு. ஆனா, தேனிக்காரரு இப்படி என்னதான் தகிடுதத்தம் செஞ்சாலும், அவங்க டீமால எங்களை ஒண்ணும் பண்ண முடியாது என்று சேலம்காரரின் விசுவாசிகள் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post கமிஷனை கேட்டு அதிகாரிகளை மிரட்டும் தாமரை கட்சி நிர்வாகிகளை பற்றி சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : Lotus ,Peter Mama ,Lotus Party ,Sleep Nagar District ,Dumnagar district ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...